திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.17 கோடியில் உருவாகிறது ஆம்னி பேருந்து நிலையம்

திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூரில் ரூ.17 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் விடப்பட்டு உள்ளது.;

Update: 2024-07-26 09:00 GMT

திருச்சி மாநகராட்சி சார்பில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே ரூ. 17 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது திருச்சி மாநகர மற்றும் மாவட்ட மக்களின் கால் நூற்றாண்டு கனவாகும். இந்த கனவை நினைவாக்கும் வகையில் தற்போது திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் சுமார் 350 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி முடிவடைந்த பின்னர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அனேகமாக வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் திறப்பு விழா கண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்ததும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் மணிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து சில மாதங்களில் கட்டுமான பணி தொடங்கியது கிட்டத்தட்ட90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் இருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில் லாரிகள் நிறுத்துவதற்கான லாரி செட் மற்றும் மொத்த காய்கறி விற்பனை நிலையம் ஆகியவை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில் ஆம்னி பஸ் நிறுத்துவதற்கும் தனியாக பஸ் நிலையம் கட்ட வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ரூ.17 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டுவதற்கான டெண்டர் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டர் வருகிற 28ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. டெண்டர் முடிவான பின்னர் உடனடியாக கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி தமிழ்நாட்டின் மையப்பகுதியாக இருப்பதால் திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி மற்றும் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஆம்னி  பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளும் திருச்சி வழியாகத்தான் செல்கின்றன.

இதன் காரணமாக திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் ஆம்னி பஸ் களின் நிறுத்தப்பட்டு இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பண்டிகை காலங்களில் இதனால் மக்கள் படும் தொல்லைக்கு அளவே இல்லை .இதன் காரணமாக திருச்சியில் பழைய திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் தனியார் ஒருவர் ஆம்னி பேருந்து நிலையம் அமைத்து சில ஆண்டுகள் நடத்தி வந்தார்.தற்போது அந்த பஸ் நிலையமும் மூடப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக மீண்டும் மத்திய பஸ் நிலைய பகுதியில் ஆம்னி பஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஏஜெண்டுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகே ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அவை அங்கு நிறுத்தப்பட்டால் திருச்சி நகருக்குள் போக்குவரத்து நெருக்கடி வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமான பணியை திருச்சி மாநகர மக்கள் பெரிதும் வரவேற்று உள்ளனர். 

Tags:    

Similar News