திருச்சியில் வாடகை செலுத்தாத 12 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
திருச்சியில் வாடகை செலுத்தாத 12 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.;
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத மாநகராட்சி கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் 12 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சொத்து வரி, மற்றும் அவற்றின் கட்டிடங்கள் வாடகைக்கு, குத்தகைக்கு விடுவதன் மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டப்படுகிறது. இப்படி உள்ள வரி இனங்கள் பல உள்ளாட்சி அமைப்புகளில் முறையாக வசூலிக்கப்படுவது இல்லை.
சொத்து வரி நிலுவை, வாடகை பாக்கி நீதிமன்ற வழக்கு போன்றவற்றின் காரணமாக பல உள்ளாட்சி அமைப்புகளில் கோடிக்கணக்கான வருவாய் நிலுவையில் உள்ளது. இவற்றை முறயைாக வசூலிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது உள்ளாட்சி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள வரியினங்களை வசூலிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 30 -க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை செலுத்தாமல் உள்ள 12 கடைகளை சீல் வைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி வாடகை நிலுவையில் உள்ள கடைகளை இன்று மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சிவசங்கர் முன்னிலையில் வருவாய் ஆய்வாளர்கள் பிச்சைமணி, செந்தில்குமார், ராஜேந்திரன் மற்றும் வரித்தண்டளர்கள் கொண்ட குழு கடைகளை பூட்டி சீல் வைத்தார்கள்.பின்னர் அவர்கள் தெரிவிக்கையில், வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் திருச்சி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வாடகை செலுத்தாத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் சீல் வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.