திருச்சியில் நடைபெறும் மாரத்தான் போட்டிக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
திருச்சியில் நடைபெறும் மாரத்தான் போட்டிக்கு கட்டணம் வசூலிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சியில் சுவாமி விவேகானந்தர் ஆன்மீக பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 13.08.2022ந் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை முதல் அண்ணா விளையாட்டரங்கம் வரை சுமார் 2000 நபர்கள் கலந்துகொள்ளும் மாரத்தான் போட்டி நடைபெறுவதாக விளம்பரம் செய்துள்ளார்கள். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 15-ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ. 10-ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ. 5-ஆயிரம் என மூன்று பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை துவங்கிவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொள்ளும் நபர் ஒன்றுக்கு ரூ. 150/- பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதில் தான் ஆட்சேபணையே எழுகிறது.
தாய் திருநாட்டின் சுதந்திரத்தை போற்றுங்கள், சிறப்பியுங்கள். ஆனால் சுதந்திரத்தின் பெயரால் தனிநபர் ஆதாயத்திற்காக போட்டி நடத்துபவர்கள், தங்களது சொந்த செலவில் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று நடத்தி கொள்வது தான் சரியானது. ஆனால் அதை விடுத்து மேற்படி மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் 2-ஆயிரம் நபர்களுக்கு தலா ரூபாய் 150/- பதிவு கட்டணம் வீதம் லட்ச கணக்கில் பணம் வசூல் செய்யும் உரிமையை இவர்களுக்கு யார் தந்தது என தெரியவில்லை.
எனவே திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனடியாக மேற்படி இலாப நோக்கத்துடனான, தனிநபர் விளம்பரத்திற்காக தேசிய ஒருமைப்பாட்டை கூறுபோட்டு விற்கும் இந்த விதமான செயல்களை தடுக்கும் விதமாக, மேற்படி மாரத்தான் போட்டிக்கு உடனடியாக தடைவிதிப்பதோடு, மேற்படி போட்டி நடத்துபவர்கள் மீது உரிய விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.