தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய அறிவிப்பு
சிறுபான்மையின மாணவ-மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிய வேண்டும். கலெக்டர் தகவல்.;
இந்திய அரசு சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டங்களை ஒப்பிடும்போது, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறும் மாணவ-மாணவிகள் மிக குறைவான எண்ணிக்கையில் ஆதார் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழில் சார்ந்த படிப்புகள் படித்து வருகிறார்கள். தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான திட்டத்தில் ஏனைய இரு திட்டங்களை விட அதிகமான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
2021-22-ம் ஆண்டு முதல் இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான திட்டத்தில் ஆதார் விவரங்களை ஒப்பளிப்பு செய்யும் மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும். தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதிக்குள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்பப்படும். எனவே தகுதியான மாணவர்கள் விரைவில் ஆதார் விவரங்களை தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.