கல்மந்தையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தை என்.ஐ.டி. வல்லுனர்கள் ஆய்வு
கல்மந்தையில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிடத்தை என்.ஐ.டி. வல்லுனர்கள் குழு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருச்சி கோட்டம் சார்பில், திருச்சி மாநகராட்சி 15-வது வார்டு தாராநல்லூர் கல்மந்தை பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.12.5 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியினை கேரள மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் ஏற்று கட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 100 சதவீத பணிகள் முடிந்ததும் அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இந்தநிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் தரமற்று கட்டப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கை வைத்தால் சிமெண்டு பூச்சுகள் உதிர்கின்றன. கதவுகள் தரமற்றதாக இருக்கின்றன என்று குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
அதன்பேரில், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கல்மந்தையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக (என்.ஐ.டி.) வல்லுனர் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
கலெக்டரின் உத்தரவின்பேரில், என்.ஐ.டி. சிவில் என்ஜினீயரிங் பிரிவு உதவி பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் பூச்சு, கான்கிரீட் தளம், சிமெண்டு, கதவு, ஜன்னல் ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவற்றின் மாதிரியையும் ஆய்வுக்காக வல்லுனர் குழு சேகரித்து சென்றனர்.
தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் ஆய்வு செய்ய வருவோம் என்றும், கட்டிடத்தின் தரம் குறித்த அறிக்கையை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அக்குழுவினர் தெரிவித்தனர். வல்லுனர் குழு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.