திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பாலியல் புகார் தொடர்பான பெயர் பலகை
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பாலியல் புகார் தொடர்பான பெயர் பலகையை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும். இந்த தன்னிறைவைஅவர்கள் வேலை பார்ப்பதன் மூலம் மட்டுமே பெற முடியும். அப்படி வேலை செய்யும் இடங்களில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள். இந்த பாலியல் சீண்டல்களை பெரும்பாலான பெண்கள் வெளியில் சொல்லாமல் குடும்ப சூழல் மற்றும் பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக சகித்துக்கொண்டு செல்கிறார்கள். சிலர் புகார் தெரிவிக்க வேண்டும் என நினைத்தாலும் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பது இல்லை.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக தான் பணிபுரியும் இடங்களில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக தமிழக அரசு வீசாகா கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெயர் பலகை வைக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.
அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் குழு மற்றும் புகார் அளிப்பது தொடர்பாக (PoSh) கமிட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் குழு உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு பயிற்சி மற்றும் பணியாளர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையை மேயர் மு. அன்பழகன் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் திவ்யா, பாலியல் நிபுணர் முனைவர் விஜயலட்சுமி, லூர்துராஜ், நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
முன்னதாக உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வினை பணியாளர்களுக்கு மத்தியில் உருவாக்க வழிவகை செய்தார்கள் இதன் மூலம் பணியிடத்தில் பாலியல் தொடர்பான வன்முறைகள் நீங்கி அனைவரும் நட்புறவோடு செயல்படவும் அதற்கான புகாரை அளிப்பதற்கும் அனைவருக்கும் ஏதுவாக அமையும் என மாண்புமிகு மேயர் அன்பழகன் கூறினார்.
தொடர்ந்து பாலியல் துன்புறுத்துதல் தடுப்பு சட்டம் 2013 குறித்து பயிற்சி தமிழ்நாடு நகர்ப்புற முதன்மை முதலீட்டு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஆளுமை மேம்படு மற்றும் விழிப்புணர்வு ஆலோசகர் குழுவில் உள்ள முனைவர் விஜயலட்சுமி, லூர்துராஜ் பயிற்சி வகுப்பினை நடத்தினார்கள்.