திருச்சியில் முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினர் போராட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-11-27 11:15 GMT

திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகத்தினரை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போலீசார். 

கடந்த 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லீம் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையத்தில், மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடத்த வந்தனர்.

பின்னர் ஒன்று கூடிய அவர்கள் வெகு நேரமாகியும் போராட்டம் தொடங்காததை கண்டு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பத்திரிகையாளர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்தவுடன் நாங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கிறோம் என்று கூறி காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் வெகு நேரமாகியும்பத்திரிகையாளர்கள் யாரும் வராததால் அவர்களிடம் சென்ற போலீசார், பத்திரிகையாளர்களுக்கு முக்கிய பேட்டிகள் உள்ளதாக சென்று விட்டனர். எனவே நீங்கள் ஆரம்பிக்கிறீர்களா? அல்லது இப்போதே கைது செய்யட்டுமா? என்று கேட்டனர்.

பின்னர் வேறு வழியின்றி மறியல் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பஸ் முன்பு அவர்கள் நின்று கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் ரபீக்ராஜா, மாநில இளைஞரணி தலைவர் சாதிக்கான், மாவட்ட அமைப்பு செயலாளர் அரியமங்கலம் ஜமாலுதீன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜவஹர், முகமது இலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 19 பெண்கள் உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News