திருச்சியில் தாய்-மகனிடம் ரூ.9 லட்சம் பணம் இரட்டிப்பு மோசடி
இரட்டிப்பு செய்து தருவதாக கூறி தாய்-மகனிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் செய்யப்பட்டது.;
திருச்சி இந்து மருத்துவர் தெருவை சேர்ந்தவர் வளர்மதி. இவரது மகன் கார்த்திகேயன் ஆகியோர் தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கு ஒரு புகார் மனு அனுப்பினர். அதேபோல, திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசிலும் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
திருச்சி தில்லைநகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணம் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கி தருவதாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பி கடந்த 2018-ம் ஆண்டில் வெவ்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.9 லட்சம் செலுத்தினோம். அந்த பணத்திற்கான ரசீதும் வழங்கப்பட்டது.
3 ஆண்டுகள் முடிந்து கடந்த 2020-ம் ஆண்டு முதலீட்டு பணத்தை கேட்டபோது, அவர்கள் வேறொரு பெரிய நிறுவனத்திலும், வங்கியிலும் அவற்றை முதலீடு செய்திருப்பதாக கூறி எங்களை ஏமாற்றும் வகையில் கால தாமதப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் முதலீடு செய்த ரூ.9 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.