வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்களிடம் பணம், நகை பறித்த 4 பேர் கைது
கோவையில் வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்களிடம் பணம், நகை பறித்த 4 பேரை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த 15 வயதுடைய 2 சிறுவர்கள் கடந்த 31-ந் தேதி வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாக போத்தனூர் போலீஸ் நிலையத்தில் சிறுவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் திருச்சி பாலக்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கோவை போத்தனூரில் மாயமானவர்கள் என்பதும், 9-ம் வகுப்பு படித்து வரும் இருவரும் வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு கோவை ரெயில் நிலையம் வந்தபோது, திருச்சியை சேர்ந்த சூர்யா என்பவருடன் அறிமுகமாகி திருச்சி வந்ததாகவும், ஆனால், அவர் சிறுவர்களை ஆட்டோவில் அழைத்து சென்று தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியும் அவர்கள் வைத்திருந்த ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மற்றும் 9 பவுன் நகைகளை பறித்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் விசாரித்தபோது பாலக்கரையை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது நண்பர்களான பிரசாத், அசோக்குமார், வின்சென்ட்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து சிறுவர்களை அடித்தும், கத்தியை காட்டி பணம் மற்றும் நகைகளை பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து சிறுவர்களிடம் பறித்த ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மற்றும் 9 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் சிறுவர்களையும், மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். சிறுவர்களிடம் பணம் பறித்த 4 பேரிடமும் பாலக்கரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.