அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக திருச்சிக்கு வரும் மோடி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக பிரதமர் மோடி திருச்சிக்கு வந்து ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலும், வரும் 21ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜன.,22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கோவில் கருவறையில் வைக்கப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்து கொடுக்க பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் அயோத்தியில் இன்றே தொடங்கிவிட்டது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ௧௧ நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். மேலும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பற்கு முன்பாக தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய மோடி திட்டமிட்டு உள்ளார். இதற்காக அவர் வருகிற 21ந்தேதி தமிழகம் வர உள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கமும், ராமேஸ்வரமும், ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உள்ளன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு முன், வரும் 21ம் தேதி, விமான மூலம் திருச்சி வந்து, ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதரை தரிசனம் செய்ய உள்ளதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை முன்னிட்டு, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், திருச்சி மாநகர போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடி திருச்சி வருகையின்போது கேலோ இந்தியா போட்டிகளில் ஒரு பிரிவினையும் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.