அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் கையடக்க கணினி வழங்கினார்
திருச்சி நிகழ்ச்சியில் அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கையடக்க கணினி வழங்கினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சிராப்பள்ளி மதுரை சாலையில் உள்ள இந்திரா கணேசன் கல்லூரி வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னோடித் திட்டமாக செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியின் 80 மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 9.60 இலட்சம் மதிப்பிலான கையடக்கக் கணினியினை வழங்கிப் பேசினார்.
இவ்விழாவில் அமைச்சர் பேசும்போது
இந்த மாதிரிப் பள்ளியின் நோக்கம், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் முனைப்பான கவனம் செலுத்தி படித்து தலைசிறந்த கல்லூரிகளில், தங்களுக்கு விருப்பமான உயர்கல்விப் படிப்பில் சேர்ந்து படிப்பதாகும். இந்த மாதிரிப் பள்ளி கடந்த அக்டோபர் 2ஆம் தேதி செந்தண்ணீர்புரம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் இம்மாணவர்களின் சிறந்த கல்விக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கையடக்கக்கணினி வழங்குவதாக தெரிவித்து அதன்படி, இன்று மாணவர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் மருங்காபுரி வட்டம் செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் அருண்குமார் ஐ.ஐ.டியில் இடம் கிடைத்து, தமிழக முதல்வரின் பாராட்டுதலைப் பெற்று, அம்மாணவரது உயர்கல்விக்கும் முதல்வர் தாயுள்ளத்தோடு உதவியுள்ளார். அதைப்போல, இந்த முன்னோடித் திட்டப் பள்ளியில் சிறந்த கல்வியினைப் பெற்று, நல்ல மதிப்பெண் பெற்று இம்மாவட்டத்திற்கும், பள்ளிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இத்தகைய திட்டங்களை வழங்கிடும் தமிழக முதல்வருக்கு பெருமை சேர்த்திட வேண்டும். நல்ல மதிப்பெண்கள் பெற்று தலை சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பயின்றிட மாணவர்கள் சிறந்த கவணம் செலுத்தி கல்வி கற்றிட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலாளர் ராஜசேகரன், இயக்குனர் முனைவர்.க.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.