பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பட்டா வழங்க கோரி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
முன்பு நீர் நிலைகளாக இருந்து நகர வளர்ச்சி காரணமாக தற்போது வரத்து வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் இல்லை என்ற நிலையில் அவற்றை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். கோவில் மனைகளில் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருபவர்கள் மற்றும் குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி தலைமுறை, தலைமுறையாக குடியிருந்து வரும் இடத்தை விட்டுஅப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும், நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்,நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே ஒரு அவசர சட்டம் இயற்றி ஏழை, எளிய மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.