திருச்சியில் கெமிக்கல் ஸ்பிரே மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்
திருச்சியில் கெமிக்கல் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்பட்ட 5 ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழ குடோனில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
திருச்சியில் ரசாயன ஸ்பிரே செய்யப்பட்டதன் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஐந்தாயிரம் கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஸ்டாலின் பிரபு, பாண்டி, வசந்தன், செல்வராஜ், மகாதேவன் அன்புச்செல்வன் ஆகியோர் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள 5மாம்பழம் மொத்த விற்பனை செய்யும் குடோன்களில் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது ஒரு குடோனில் 5270 கிலோ எடையுள்ள எத்திலின் ரசாயன ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டபூர்வ இரண்டு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவுப் பொருட்கள் சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
கெமிக்கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன. மேலும் துறையூர் பகுதியில் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 15 வாழைப்பழத்தார்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் இது போன்ற பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைப்பது தெரிந்தால் உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் சட்டப்படி கடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உணவு கலப்பட புகாருக்கு 99 44 95 95 95 மற்றும் 95 85 95 95 95 ஆகிய எண்களில் புகார் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.