மணப்பாறையில் கொட்டி தீர்த்த மழையால் திருச்சியில் வெள்ளப்பெருக்கு
மணப்பாறையில் கொட்டி தீர்த்த மழையால் திருச்சியில் வெள்ளம்போல் வந்த நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று அதிகாலை துவங்கி 9 மணிவரை அதிக அளவு கனமழை பெய்தது. சில மணி நேரங்களில் மட்டும் 274.6மிமீ மழை பதிவாகியுள்ளது. அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகப்படியான வெள்ள நீர் அரியாற்றில் வந்ததன் காரணமாக புங்கனூர் அருகே அரியாற்றில் நேற்று மாலை உடைப்பு ஏற்பட்டதால் கருமண்டபம், திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கருமண்டபத்தில் உள்ள திருச்சி- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.
மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு வேலைக்கு வந்தவர்கள், பள்ளிக்கு வந்த குழந்தைகள், மருத்துவமனைக்கு வந்த முதியவர்கள் என அனைவரும் கிட்டத்தட்ட 2 மணி நேரமாக டூவீலர்கள் மற்றும், லாரிகள், கார்களில் செல்ல முடியாமல் தவித்தனர்.
டூவீலரில் சென்ற பெண்கள் கீழே விழும் நிலை ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும் போலீசார் யாரும் வரவில்லை என பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். இதையடுத்து சுமார் 2 மணி நேரதத்திற்கு பிறகு திருச்சி மாநகர போலீசார் வந்து வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு அனுப்பி வைத்தனர்.