திருச்சியில் மொபட் திருடிய ஒருவர் கைது: 2 வாகனம் மீட்பு

திருச்சியில் மொபட் திருடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 வாகனங்கள் மீட்கப்பட்டன.

Update: 2021-09-29 16:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே உள்ள குமாரமங்கலம் சாய்ஸ்ரீ நகரை சேர்ந்தவர் உதயசந்திரன் மகன் பாக்கியராஜ் (வயது 39). இவர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் ஓயாமரி சுடுகாடு வழியாக பொன்மலைக்கு சென்றபோது டாஸ்மாக் கடை அருகே அவரது மொபட்டை வழிமறித்த ஒருவர் கையில் இரும்பு கம்பியை வைத்து கொண்டு பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுக்காததால் அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டார்.

இதில் பயந்துபோன பாக்கியராஜ் அவரது மொபட்டை அங்கேயே போட்டு விட்டு தப்பி விட்டார். இதையடுத்து அந்த நபர் பாக்கியராஜின் மொபட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார். இந்நிலையில் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ஓட்டி வந்த மொபட் பாக்கியராஜுடையது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து பாக்கியராஜின் மொபட் மற்றும் நேற்று காலை பாபு ரோடு திப்பிரான் தொட்டி தெருவில் உள்ள முத்துமாணிக்கம் என்பவரது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்து திருட்டு போன ஒரு மொபட் ஆகிய இரண்டு வாகனங்களை போலீசார் மணிகண்டனிடம் இருந்து மீட்டனர். பின்னர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News