திருச்சியில் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்தின் முப்பெரும் விழா
திருச்சியில் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் ஒன்பதாம் ஆண்டு விழா, உழைப்பாளர் தின விழா, அஞ்சல்தலை சேகரிப்பில் முத்திரை பதித்தவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு வரவேற்றார். நிறுவனர் நாசர் துவக்கவுரையாற்றினார். தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
பொழுது போக்கின் அரசன் என்று கூறப்படும் அஞ்சல் தலை சேகரிப்பு கலையில் ஈடுபட்டு பொழுதுபோக்குடன் கூடிய பொது அறிவினை வழங்கியும் இந்திய அஞ்சல் துறையினர் நடத்தும் கண்காட்சியில் பங்கேற்று உள்ளூர் முதல் உலகளவில் தடம் பதித்தவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மூத்த அஞ்சல்தலை சேகரிப்பாளர்களான நாசர், ராஜேந்திரன், ஜனாப் ஜலால், ஹரிஷ், ரமேஷ், பத்ரி நாராயணன்,சதீஷ் பாபு உள்ளிட்டோரை பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மாவட்டம், மாநில அளவில் நடைபெற்ற அஞ்சல்தலை கண்காட்சியில் பங்கேற்று பரிசுகள் பெற்ற அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் தாமோதரன், முத்துமணி கண்ட கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலாளர் விஜயகுமார் பாராட்டுச் சான்றிதழையும் நினைவுப் பரிசினையும் வழங்கி கௌரவித்தார்.
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள்.