திருச்சியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு
சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய திருச்சி போலீசாருக்கு பெற்றோர் நேரில் வந்து பாராட்டு தெரிவித்தனர்.;
திருச்சியில் கடந்த 4 - ந்தேதி கே.கே. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தனூர் குளத்தில் எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த அப்துல் ரகுமான், சவுக்கத் அலி, அபு ஆகியோர் குளிக்க சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி கைகளை அசைத்த நிலையில் உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாக ரோந்து பணி மேற்கொண்ட தலைமை காவலர் செல்வ சாமிநாதன் மற்றும் பெண் முதல்நிலை காவலர் அறிவுச்சுடர் ஆகியோர் உயிருக்கு போராடியவர்களை கண்டவுடன் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து நீரில் மூழ்கிய சிறுவர்கள் மூவரையும் மீட்டு பொதுமக்கள் உதவியுடன் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிறுவன் அப்துல் ரகுமான் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது குணமாகி வீடு திரும்பி உள்ளான்.இதனை தொடர்ந்து அப்துல் ரகுமானின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் பிள்ளையின் உயிரை காப்பாற்றிய காவலர்கள் செல்வசாமிநாதன் மற்றும் அறிவு சுடர் ஆகியோருக்கு ஆய்வாளர் முன்னிலையில் பாராட்டி தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
மேலும் தன் உயிரையும் துச்சமென நினைத்து சிறுவர்களை காப்பாற்றிய தலைமை காவலர் செல்வ சுவாமிநாதன் மற்றும் பெண் காவலர் அறிவுச்சுடர் ஆகியோருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனும் பாராட்டு தெரிவித்துள்ளார்.