திருச்சி வரகனேரியில் இரு கோவில்களில் இன்று கும்பாபிஷேகம்
திருச்சி வரகனேரியில் இரு கோவில்களில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சி வரகனேரி ஆனந்தபுரம் பகுதியில் பட்ட மரத்து மாரியம்மன் நூதன ஆலயம் மற்றும் நித்தியானந்தபுரம் முத்துக்கண் மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அப்பகுதியில் பழமையான இந்த கோவில்களில் 26 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதற்காக கடந்த மாதம் 21 ஆம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக கடந்த 6 ஆம் தேதி காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடங்களில் புனித நீரை சுமந்து வந்தனர். அதனையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 6 ஆம் தேதி மாலை 5 மணிக்கு முதல் கால யாக பூஜையும், 7 ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் கால யாக பூஜை 7 ஆம் தேதி மாலை நடத்தப்பட்டது.
இன்று காலை5.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடத்தப்பட்டு 10.30 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடானது. அதனை தொடர்ந்து 10.50 மணிக்கு மேல் இரண்டு கோவில்களிலும் விமான கலசம் உட்பட அனைத்து கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடை பெற்றதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.