திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் கருணாநிதி சிலை காணொலி மூலம் திறப்பு
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் கருணாநிதி சிலை காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
திருச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
மறைந்த தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை கொண்டாடப்பட உள்ள இந்த விழாவில் எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்திலும் இந்த வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76வது நிகழ்ச்சியானது, கருணாநிதி நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள டி.வி.எஸ். டோல்கேட்டில் கருணாநிதி திருவுருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு, முன்னிலை வகித்தார்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கருணாநிதி உருவ சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
இந்த விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகர திமுக செயலாளர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.