திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தாயார் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஊஞ்சல் உற்வசம் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று தாயார் ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வருகிற 25-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தை சேர்கிறார். அங்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளலும், பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பாடும் நடக்கிறது. இரவு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
இதேபோல் 26-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சேர்தல், இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் கண்டருளி, இரவு 8.30 மணிக்கு மண்டபத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடு, இரவு 9 மணிக்கு தாயார் பல்லக்குடன் மூலஸ்தானம் சேர்தல் சேவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.