திருச்சியில் அடகு கடையின் பூட்டை உடைத்து நகை திருட்டு
திருச்சி கோட்டை பகுதியில், அடகு கடையின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
திருச்சி வயலூர் ரோடு அம்மையப்பா நகர் ஆனந்தம் நகரின் சேர்ந்தவர் முருகேசன் மகன் ஸ்ரீதர் (வயது 36). இவரும், இவரது தம்பியுமான ஸ்ரீ ராம் (வயது 32) ஆகியோர், கடந்த ஆறு வருடங்களாக திருச்சி கோட்டை பகுதியில் உள்ள நடு குஜிலி தெருவில், ஸ்ரீ கோல்டு பைனான்ஸ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு 9 மணிக்கு அடகு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர், இன்று காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த அடகு பிடித்த நகைகள் 22 கிராம் மற்றும் 150 கிராம் வெள்ளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, கோட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.