திருச்சி ஜே.கே.நகரில் ஒரே நாள் இரவில் கோவில், வீடுகளில் நகை பணம் கொள்ளை
திருச்சி ஜே.கே.நகரில் ஒரே நாள் இரவில் கோவில், வீடுகளில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.;
திருச்சி விமான நிலையம் அருகில் உள்ளது ஜே.கே. நகர். இங்கு நேற்று இரவு ஒரே நாளில் இரண்டு கோவில்கள் மற்றும் இரண்டு வீடுகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது.
இங்குள்ள ஜெயங்கொண்ட விநாயகர் கோவிலில் உண்டியலை கொள்ளையடித்த திருடர்கள் அதன்பின் கோவில் அருகில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கு கதவு மிகவும் பலமாக இருந்தால் அவர்களால் திருட முடியவில்லை.
இதனை தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அந்த வீட்டில் 15 பவுன் நகை பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் பிள்ளையார் கோவில் எதிரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலிலும் பூட்டை உடைத்துகொள்ளையடிக்க முயன்று உள்ளனர். ஆனால் பூட்டை உடைக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் ஜே.கே. நகர் பகுதி மக்களிடம் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சாய்பாபா கோவிலில் பதிவாகியிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகளை வைத்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.