பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரி திருச்சி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கூத்தைப்பார் தன்ராஜ், துணைத்தலைவர் திருச்சி ஜி.ஆர்.சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர்.
அப்போது பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதன் பின்னர் திருச்சி ஜி.ஆர்.சிவா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாரம்பரிய முறையில் வேஷ்டி, சாப்பாடு, வாடகைப்படி போன்றவை மட்டும் வழங்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி ஏழை, எளிய அனைத்து தரப்பு மக்களின் ஜல்லிக்கட்டு காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் முறை தேவையில்லை.
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் 700 பேர் கலந்து கொள்ளும் ஒரு பிரிவுக்கு 200 வீரர்கள் வீதம் பங்குபெற்று காளைகளை அடக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் ஆகையால் எங்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தோம். அவர் பரிசீலனை செய்வதாக கலெக்டர் தெரிவித்தார் என்றார்.
இதுகுறித்து கால்நடைத் துறை கண்காணிப்பாளர் ஜோசப் கூறும்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள 10 கிராம மக்கள் இதுவரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். வழக்கமாக சில மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இதுதவிர அந்தந்த ஊர் திருவிழா சமயங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இவர்கள் தான் தற்போது அனுமதி கோரியுள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமலில் உள்ளது. இந்த வகையில் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.அதனால் திட்டமிட்டபடி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்றார்.