திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-08-15 16:30 GMT

திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர் ராஜ் நகர் ஹைவேஸ் காலனியில் நடந்த சுதந்திர தினவிழாவில் சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முன்னாள் முதல்வர் விஜயகுமார் பேசினார்.

திருச்சி சுப்பிரமணிய புரம் சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக 78வது சுதந்திர தின விழா சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது.

சேஷசாயி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முன்னாள் முதல்வர்  டாக்டர் கே. விஜயகுமார் தலைமை ஏற்று தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். முன்னதாக பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

டாக்டர் விஜயகுமார் பேசுகையில் மாணவர்கள் அலைபேசி பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.


சக்திவேல், நலச் சங்கத்தின் மூத்த உறுப்பினர், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி வாசிக்க, அவர்கள் தாங்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

நலச்சங்கத்தின் மிக மூத்த உறுப்பினர் நபிகானின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.

மாநில அளவில் சிலம்பம் போட்டியில் பரிசுகள் வென்றுள்ள ஜான் பிரிட்டோ பள்ளி ஆறாம் வகுப்பு மாணவன் ஜோயல் விபாஷனுக்கு  பொன்னாடை அணிவிக்கப்பட்டது

பின்னர் நடந்த ஓவிய போட்டியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான மெதுவாக சைக்கிள் ஓட்டும் பந்தயம், மாணவ மாணவிகளுக்கான இசை நாற்காலி போட்டியும் நடைபெற்றது.

மரங்கள் வளர்க்கும் அவசியத்தை உணர்த்தும் வகையில் சுந்தர்ராஜ் நகர் மற்றும் ஹைவேஸ் காலனியில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. யோகா பயிற்சியாளர் பேராசிரியர் ஆர்.சந்திரசேகர் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் சிறப்பு புத்தக கண்காட்சி சுந்தரராஜ் நகர் பூங்காவில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் புத்தகங்களை வாங்கி பயன்பெற்றனர்.

Tags:    

Similar News