திருச்சியில் வேன் டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி பணம் பறிப்பு
திருச்சியில் வேன் டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி மர்ம நபர்கள் பணம் பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மணியம்மை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 52). வாடகை வேன் டிரைவரான இவர் சம்பவத்தன்று இரவு 10.30 மணி அளவில் வேலை முடித்துவிட்டு பொன்மலை சந்தை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இருட்டில் நின்றுகொண்டிருந்த மர்ம நபர்கள் 3 பேர் இரும்பு கம்பியால் தாக்கி ரூ.500-ஐ பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதிகள் காலியாக உள்ளதாலும், அங்கு தெரு விளக்குகள் இல்லாததாலும், இரவில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் காலியாக உள்ள பகுதிகளை மூட வேண்டும் எனவும், அப்பகுதிகளில் ரெயில்வே போலீசாரும், மாநகர போலீசாரும் அதிகப்படியாக ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் ரயில்வே ஊழியர்களும் அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.