எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலையானது எப்படி?திருச்சி சரக டி.ஐ.ஜி. பேட்டி

திருச்சி எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது பற்றி டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2021-11-22 13:15 GMT

திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர்

திருச்சி நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவண சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூமிநாதன் கொலை வழக்கில் விசாரணை நடத்திட 4 தனிப்படை அமைக்கப்பட்டு, 2 இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 3 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொலை சம்பவம் சம்பந்தப்பட்ட இடங்களில் கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டும், சில ரகசிய தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் கூற்றுப்படி 3 பேரும் சேர்ந்தே கொலை செய்து உள்ளனர். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டின் படி அவர் பின்னால் இருந்து தான் தாக்கப்பட்டு உள்ளார். குற்றவாளிகள் பிடிபட்ட போது பூமிநாதன் தனது செல்போன் மூலமாக எஸ்.எஸ்.ஐ. சேகரை அழைத்துள்ளார். உடன் விரட்டி வந்த போலீஸ்காரர் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார். அவ்வாறு அழைத்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பின்னால் இருந்து தாக்கப்பட்ட சம்பவமாக தான் நாங்கள் இதனை பார்க்கிறோம்.

பள்ளத்துப்பட்டி வரை இரண்டு இருசக்கர வாகனங்களில் போலீசார் குற்றவாளிகளை விரட்டி சென்று உள்ளனர். பள்ளத்துப்பட்டி பிரிவு ரோட்டில் குற்றவாளிகள் வலது புறம் திரும்பி உள்ளனர். அவர்களை விரட்டி கொண்டு பூமிநாதன் சென்றுள்ளார். பின்னால் வந்த போலீஸ்காரர் நேராக சென்றதால் வழி தெரியாமல் கீரனூர் வரை சென்று விட்டார். ஏரியா தொியாமல் இருவரும் பிரிந்து சென்றதால், ஏற்பட்ட அரை மணி நேர குழப்பத்தில் இந்த கொலை நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News