திருச்சியில் தொழிலதிபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருச்சியில் தொழிலதிபர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி தில்லைநகர் 6-வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (வயது 50). தொழிலதிபர். நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், வீட்டில் இருந்த பீரோவை திறந்து நகை, பணத்தை திருடியுள்ளார்.
சத்தம் கேட்டு அவருடைய மகன் கண்விழித்த போது, மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போடவே வீட்டில் உள்ளவர்கள் எழுந்து வந்தனர். ஆனால் அதற்குள் திருடன் தப்பி ஓடிவிட்டான். இதைத்தொடர்ந்து சீனிவாசன் பீரோவை திறந்து பார்த்த போது, அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.1½ லட்சம் பணம் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.