திருச்சி அருகே பெண் விவகாரத்தில் வீடு புகுந்து தாக்குதல்: 5 பேர் கைது
திருச்சி அருகே பெண் விவகாரத்தில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி அருகே மேல கல்கண்டார் கோட்டையில் பெண் விவகாரம் தொடர்பாக வீடு புகுந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தர்மராஜ் (வயது 22) .இவரது நண்பர் சரவணன் என்பவர் மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுன் நகர் பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவரது காதலியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா தனது நண்பர்கள் கார்த்திக் , ஜெகதீசன், ராமு, ரவி, ஆட்டோ பிரபு, பிரபாகரன், லியோ, முரளி, ராம் பிரசாத், சுதாகர், சின்னத்தம்பி, சேவாக் உள்ளிட்டவர்களை அழைத்துக் கொண்டு விவேகானந்த நகருக்குச் சென்றார். அப்போது தர்மராஜ் தனது வீட்டில் இன்னொரு நண்பரான சுதாகருடன் பேசிக்கொண்டு இருந்தார்
இதைத் தொடர்ந்து அந்த 14 பேர் கும்பல் அத்துமீறி அவரது வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கத்தி மற்றும் பீர்பாட்டில் ஆகியவற்றால் குத்தினர் மேலும் தென்னை மட்டையால் அவர்களை தாக்கியதோடு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் தர்மராஜுக்கு தலையிலும் கண்ணிலும் சுதாகருக்கு தலை மற்றும் கையிலும் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தர்மராஜ் கொடுத்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் மேற்கண்ட 14 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கார்த்திக் இன்னொரு சுதாகர் பிரபாகரன், லியோ, முரளி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர் மீதமுள்ள ஒன்பது பேரை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று திருச்சி செந்தண்ணீர்புரம் அரசு பள்ளி அருகில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு வேறு தரப்பைச் சேர்ந்த 13 பேர் மீது பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.