மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் வீடற்றவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டுகோள்
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் வீடற்றவர்கள் விண்ணப்பம் செய்து பயன் அடையுமாறு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் வீடற்ற மக்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு எச்.எம். கே.பி மாநில செயலாளர் ராபர்ட் திருஷ்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து எச். எம். கே. பி. அமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிருஷ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் அனைவரும் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் தங்கள் உழைப்பில் சரிபாதியை வாடகையாக செலுத்தி அவதிப்படுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் குடிசை மாற்று வாரியத்தில் வீடு பெறுவதற்கு ஒரு லட்சம் முன்பணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்த அடித்தட்டு குடும்பங்களுக்கு இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் எதுவும் செய்யாத நிலையில் தமிழக முதல்வரின் இன்றைய மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
ஆகவே திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்டங்களில் 80 இடங்களில் நடைபெறுகிற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அடித்தட்டு வீடற்ற குடும்பங்கள் அதன் 45 சேவையின் செயல் பதிவுகளின் ஒரு திட்டமான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில் வீட்டுமனையுடன் வீடு வழங்கும் திட்டத்தில் இலவசமாகவோ அல்லது தவணை அடிப்படையிலோ கலைஞர் குடிலகம் என்ற பெயரில் வீடு வழங்கிட வேண்டுமென்று அந்தந்த பகுதி மக்கள் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படி மனு அளிப்பவர்களுக்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்தி பட்டா வழங்க ஏற்பாடு செய்திட தமிழக முதலமைச்சர் வழி வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.