திருச்சியில் லஞ்ச வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
திருச்சியில் லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமை காவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் ரவி. இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த போது, பாஸ்போர்ட் சான்றிதழ் விசாரணைக்காக சீனிவாசன் என்பவரிடம் ரூ.500 லஞ்சம் வாங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவியை கையும் களவுமாக பிடித்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடை பெற்று வந்தது. இதில் விசாரணை முடிந்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏட்டு ரவிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.