திருச்சி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு
திருச்சி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்கு பின் 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.;
கொரோனா பரவலை தடுக்க கடந்த ஆண்டில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், முதலில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளும், பின்னர் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் திறக்கப்பட்டன. மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், 10-ம் தேதி வரை ஒன்று முதல் 8 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனால், அரையாண்டு விடுமுறைக்கு பின் மீண்டும் இன்று நடைபெற வேண்டிய பள்ளிகள் மறுதிறப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை வகுப்புகள் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டும் அரையாண்டு விடுமுறைக்கு பின் இன்று (3ம் தேதி) மீண்டும் திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி வகுப்புகள் நடை பெறும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்படவில்லை.
அதேசமயம், ஆசிரிய, ஆசிரியைகள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து, கற்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள். இம்மாணவ, மாணவிகளுக்கு கற்பித்தல் தொடர்பாக அரசு உத்தரவின் பேரில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறினார்.