ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முப்பெரும்விழா
திருச்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்ற மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் முப்பெரும்விழா நடைபெற்றது.
திருச்சியில் பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் பிளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
திருச்சி பெமினா ஓட்டலில் பௌர்ணமி அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தொழில் முனைவோர் கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் ஆயுட்கால அறங்காவலரும், பொதுப்பணித்துறை ஓய்வு பெற்ற முதன்மை பொறியாளரும், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு வல்லுனர் குழு உறுப்பினருமான ஆர்.தங்க பிரகாசம் தலைமை தாங்கினார். தலைவர் ஜெகதீஷ் குமார் தொடங்கி வைத்து பேசினார்.
அறக்கட்டளையின் நிர்வாகி செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அசோகன் வரவேற்றார்.இந்த விழாவில் ‘அம்பேத்கரை படித்தேன் ஐ.ஏ.எஸ். ஆனேன்’ என்ற தலைப்பில் ஆந்திர மாநிலம் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அவர் பேசுகையில் ‘புரட்சியாளர் அம்பேத்கர் இளமைப் பருவத்தில் சாதியின் தீண்டமையால் பல நிராகரிப்புகளை சந்திருந்த போதும் கல்வியால் சமூக மாற்றத்தையே ஏற்படுத்தினார். நீரை தொட கூடாது தீட்டு என அவரை சாதி தடுத்தது .ஆனால் அவர் நீர் வளத்துறை அமைச்சராகி பலரின் தாகத்தை தீர்த்தார் . பணம் இல்லாமல் தன் படிப்பை நிறுத்திய போதும் பிற்காலத்தில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவை நெறிபடுத்தும் கொள்கைகளை எழுதினார்.அம்பேத்கர் கல்வியால் மட்டுமே பெரும் சமூக மாற்றத்தை நிகழ்த்தி இந்தியாவை வழி நடத்தி கொண்டுள்ளார்’ என்றார்.
தொடர்ந்து மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் எஸ். சரவணன் ஐ.ஏ.எஸ். ‘நம்மாலும் முடியும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது கூறியதாவது:-
முதலில் மாணவர்கள் நாம் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற மனநிலையில் இருந்து மாற வேண்டும். மத்திய, மாநில அரசுகளில் வேலை வாய்ப்பு தரக்கூடிய கல்வியை தேர்வு செய்து படிக்க வேண்டும். மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. பாட மதிப்பெண் என்பது ஒரு அளவீடு தான்.அதனையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நாம் சாதாரண பள்ளிகளில் படித்தவர்கள், நமக்கு ஆங்கிலம் தெரியாது. தமிழிலும் நன்றாக பேச வராது என நினைக்க வேண்டாம்.
எந்த ஒரு தகுதியும் பிறவியில் இருந்து வருவது அல்ல. தகுதியை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் மாணவர்கள் பள்ளி கல்லூரியில் படிக்கும்போதே தங்களுக்கான ஒரு எதிர்பார்ப்பை, ஒரு இலக்கை ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். நமது நிறை குறைகளை தெரிந்து கொண்டு சிந்தித்து செயல்பட வேண்டும். தகுதியை நாம் வளர்த்துக் கொள்வது ஒரு நாளில் வந்து விடாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதியை வளர்த்துக்கொள்வதற்கு தான் பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட் என்று பெயர்.
அடிப்படை இல்லாமல் எதுவும் நடக்காது. நமக்கு அடிப்படை என்பது கல்வி தான். எனவே எப்படியாவது ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்கவேண்டும். உங்களை நீங்கள் யாரையும் எதிர்கொள்ளாமல் சொந்த காலில் பயணத்தை தொடர்வதற்கான உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் நமது பசி தீர்ந்தால் தான் அடுத்தவர்கள் பசியை போக்க முடியும். மற்றவர்களுக்கு உதவுகிற சிந்தனையை வளர்க்க வேண்டும்.
சிவில் சர்வீஸ் பணிகளில் மொத்தம் 26 வேலை வாய்ப்புகள் இருக்கிறது. கடின உழைப்பால் தான் வெற்றி பெற முடியும். உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலான அரசு பணிகளுக்கு, 90சதவீத அரசு பணிகளுக்கு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை தகுதியாகும். எனவே முதலில் ஒரு பட்டப் படிப்பை முடிக்க வேண்டும். கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வழிகாட்டுதலுக்கு ஆளில்லை. இப்பொழுது நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது.
மாணவர்கள் செய்தித்தாள்களை தினமும் படிக்க வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை செய்தித்தாள்கள் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். இப்பொழுதெல்லாம் செய்திகளை படிப்பதற்கு டீக்கடைக்கும்,சலூன் கடைக்கும் செல்ல வேண்டியது இல்லை ஸ்மார்ட் ஃபோனிலேயே இ பேப்பர் வந்துவிட்டது. அவற்றை பார்க்கலாம்.
ஐ.ஏ.எஸ். படிப்பதற்கு தமிழக அரசு மாதம் 7500 ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது. பிரிலிம்ஸ் முடித்து மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது .நேர்காணலுக்காக டெல்லி செல்ல வேண்டும் என்றால் முழு தொகையையும் செலவுக்கு வழங்குகிறது. இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கிறது. இந்த வாய்ப்புகளை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினால் தான் உயர்வடைய முடியும். இட ஒதுக்கீடு பெற தகுதி உள்ள நாம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஐஏஎஸ்,ஐபிஎஸ் தேர்வுகள் கடினமாக தான் இருக்கும். முதலில் சுயநலத்துடன் அதனை படித்து நாம் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் பதவியில் இருந்து கொண்டு பொது நலத்திற்காக சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் சமூகமும் உயரும். உங்களுக்கான அடையாளத்தை நீங்கள் தான் தேடி கண்டுபிடித்து அதனுடன் பயணிக்க வேண்டும். எனது எதிர்காலத்தை நானே பார்த்துக்கொள்வேன் என்ற மனநிலையை மாணவர்கள் அடைய வேண்டும்.
விளிம்பு நிலை மக்களுக்காக தமிழக அரசு 1 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஒதுக்கி இருக்கிறது. எனவே நமக்கான வாய்ப்புகளை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
மற்றும் பேராசிரியர்கள் சௌந்திரராஜன், ராமஜெயம், டாக்டர் ராமலிங்கம், தன்ராஜ், பொறியாளர் விஜய் மகாராஜா , சென்னை ஜி.எஸ்.டி. கூடுதல் கமிஷனர் மோகன் கோபு, சேலம் மத்திய வருவாய் துறை துணை ஆணையர் கண்ணன், வழக்கறிஞர் திருமுருகன், முனைவர் கவிமணி ஆகியோரும் பேசினார்கள்.
இதனை தொடர்ந்து தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு பொறியாளர் ராஜூ தலைமை தாங்கினார். குருநாதன், பிரகாஷ் ஆகியோர் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார்கள்.
இதனை தொடர்ந்து மாணவர் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் துணைத் தலைவர் ஜோதி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. பாஸ்கரன், பாலகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், வெங்கடேசன், செங்கோட்டையன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இறுதியாக சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிளஸ் டூ முடித்த மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். அம்பேத்கர் பற்றிய பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் அறக்கட்டளை சார்பில் அம்பேத்கர் புத்தகங்களும், எழுது பொருட்களும் வழங்கப்பட்டது.