திருச்சி 'கிராமாலயா' நிறுவனர் எஸ்.தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது

திருச்சி ‘கிராமாலயா’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-27 12:05 GMT

கிராமாலயா நிறுவனர் எஸ். தாமோதரன்.

திருச்சி கிராமாலயா நிறுவனர் எஸ்.தாமோதரனுக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி கல்வி, அரசியல், சமூக சேவை, விளையாட்டு மற்றும் வீரதீர செயல்களை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்து கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருது பட்டியல் சமீபத்தில் வெளியிப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் திருச்சியைச் சேர்ந்த கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.தாமோதரனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை அறிவித்து உள்ளது. அவரது சிறந்த சமூக சேவைக்காக பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

தாமோதரன் திருச்சி உறையூரை பூர்வீகமாக கொண்டவர். 1987ஆம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து கிராமப்புறங்களில் மக்களின் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், சுகாதாரத்தை அவர்களிடம் வலியுறுத்துவதற்காக இந்த தொண்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஓராண்டல்ல,ஈராண்டல்ல இருபத்தி ஐந்தாவது வயதில் அவர் தொடங்கிய இந்த சமூக பணிக்கு 35-வது ஆண்டில் அடிஎடுத்து வைத்த பின்னர்  தற்போது அவரது 59 ஆம் வயதில் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

எந்த ஒரு அரசியல் பின்புலமும் ,சமூக பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண நடுத்தர விவசாயகுடும்பத்தை சேர்ந்த தாமோதரனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றால் அது முழுக்க முழுக்க அவருடைய உழைப்பு, தன்னம்பிக்கை, கிராமப்புற சேவைகளுக்கானது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

1987-ம் ஆண்டில் தனது 24வது வயதில் அவர் கிராமாலயா தொண்டு நிறுவனத்தை தொடங்கினார் என்றாலும் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதே அந்தியோதயா என்ற இயக்கத்தின் மூலம் காந்திய வழியில் கிராமங்களுக்கு சென்று உதவி செய்தது தான் அவர் இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒரு அடிப்படையாக அமைந்தது.


கிராமப்புற ஏழைகளுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதை தன் வாழ்நாளில் குறிக்கோளாகக் கொண்டு தாமோதரன் இந்த பணியை துவக்கினார். 550 க்கும் அதிகமான பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி வளாக கழிப்பறைகள் கட்ட உதவியுள்ளார். 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற குடிசைப் பகுதிகளை திறந்தவெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க உதவியுள்ளார். சுகாதார மேம்பாட்டிற்காக சமுதாய தலைவர்களை ஈடுபடுத்தி இந்தியாவில் பல முன்னோடி திட்டங்களை உருவாக்கினார் .இவரது திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு கிராமாலயா பயிற்சி மூலம் இந்தியா முழுவதும் 500க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்கள் தங்களை சுகாதாரத் திட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் திருச்சியைச் சேர்ந்த 20 வயது  அந்த இளைஞர் தன் கல்லூரியில் சேவை இயக்கத்தில் இணைந்து அருகிலிருந்த கிராமங்களை பார்வையிடச் சென்றபோது தன்னையும் தன் வாழ்நாளின் லட்சியங்களையும் அது மாற்ற போவதை கற்பனை கூட செய்து பார்த்ததில்லை அப்போது.

தாமோதரன் தொடங்கிய இந்த கிராமப்புற வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் முன்மாதிரி திட்டமாக தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட நவள ஆதார மையமாக கிராமாலயா நிறுவனத்தை அறிவித்து தென்னிந்தியாவின் அரசு அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து பயிற்சி அளிக்க உதவியது. 2017 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று கிராமாலயா நிறுவனர் தாமோதரனுக்கு 'டாய்லெட் டைட்டன்' விருதினை நமது குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.

கிராமாலயா நிறுவனர் தாமோதரன் ஆரம்ப காலகட்டங்களில் கிராமப்புறங்களில் குடிநீர் மற்றும் சுகாதார திட்டங்களை செயல்படுத்தும் போது அந்த கிராமங்களில் உள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கும் பல உதவிகளை செய்துள்ளார். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் வேட்டக்குடி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்து செல்வதையும், அவை கிராம மக்களால் வேட்டையாட படுவதையும் கவனித்த தாமோதரன் அப்போதைய பத்திரிகையாளர்களின் உதவியோடு அதனை வெளியுலகத்திற்கு படம் பிடித்துக் காட்டினார்.

இதன் மூலம் அப்போதைய அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் மணிமேகலை சட்டமன்றத்தில் பேசி வேட்டைக்குடி பகுதியில் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு இப்போது அது ஒரு பெரிய பறவைகள் சரணாலயமாக உருவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


சாதனைகள் செய்வதற்கு பின்புலம் தேவையில்லை. உழைப்பதற்கு உறுதியான உடலும் தளராத மனமும் இருந்தால் போதும் அதன்மூலம் சுயநலமற்ற சமூக சேவையை செய்தால் விருதுகள் நம்மை தேடிவந்து கதவைத் தட்டும் என்பது தாமோதரன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது இவருக்கான பத்மஸ்ரீ விருது.

இதன் மூலம் நாட்டின் முதல் குடிமகனின் கையால் விரைவில் பத்மஸ்ரீ விருதினை பெற இருக்கிறார் இந்த 59 வயது இளஞரான திருச்சிக்காரர்.

Tags:    

Similar News