திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்யக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-12-28 15:49 GMT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் திமுக அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தினர் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை நகரங்களில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இன்பராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் லட்சுமணன், மாவட்ட செயலாளர் கென்னடி, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி தங்கவேல் ஆகியோர் கண்டன உயைாற்றி பேசினார்கள்.

இதில் பல்வேறு அரசுத்துறை ஊழியர்கள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 60 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News