திருச்சியில் சிறுமியை கடித்து குதறிய தெருநாய்
திருச்சியில் தெருநாய் கடித்ததால் ஏற்பட்ட ரத்த காயங்களுடன் சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி;
தெருநாய் கடித்ததால் முகத்தில் காயம் பட்ட சிறுமி
திருச்சி மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் வீட்டை விட்டுஅச்சத்துடனே சென்று, வருகின்றனர்.
நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் திருச்சி மாநகராட்சியால் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டும் எந்தவித பயனும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எந்த பகுதிக்கு சென்றாலும் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கும்பலாக சுற்றித்திரிவதை பார்த்து பலரும் அச்சத்துடன் செல்கின்றனர்.
இந்நிலையில் திருச்சி பெரிய சௌராஷ்டிரா தெருவை சேர்ந்த பாண்டி என்பவரின் மூன்றரை வயது மகள் சிவன்யாவை இன்று வெறி நாய் ஒன்று கடித்து குதறி உள்ளது. இதனால் அந்த குழந்தைக்கு முகம் முழுவதும் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த குழந்தை சிவன்யாவை கொண்டு சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்த தகவலறிந்த திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உத்தரவின் பேரில், மாநகராட்சி திகாரிகள் உடனடியாக நாய்களை பிடிக்கும் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த குழந்தையை கடித்த நாயை லாவகமாக பிடித்து சென்றனர். இனியாவது மாநகராட்சி அதிகாரிகள் இது போல வேறு யாரையும் நாய்கள் கடித்து, குதறாத வகையில் விழித்துக்கொண்டு தெருக்களில் அழையும் நாய்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் பொதுமக்களின் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க வேண்டியது இருக்கும் . அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.