திருச்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ கண்காட்சி துவக்கம்
திருச்சி அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் இன்று தொடங்கியது.
திருச்சி அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் இன்று தொடங்கியது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு பேசும்போது
மழை உரிய பருவ காலத்தில் பெய்யாததால் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கும் தினை, கம்பு உள்ளிட்டவற்றை விவசாயிகளால் முறையாக விளைவிக்க முடியவில்லை. சித்த மருத்துவம் நோய்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கிறது. பேராசிரியர் அன்பழகன், வீராச்சாமி போன்றோர் சித்த மருத்துவத்தை தான் உபயோகித்தார்கள். திருச்சி மாவட்டத்தில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையிலேயே இணைக்க முயற்சிக்கிறோம். அப்படி இல்லையென்றால் கூட்டத்தொடரில் மருத்துவ துறைக்கான மானிய கோரிக்கையில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இன்று தொடங்கியுள்ள கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும். இந்த கண்காட்சியில் சித்த மருத்துவத்தில் உள்ள மருத்துவ பொருட்கள் அதனால் கிடைக்கும் பயன்கள், அரசு மருத்துவ மனையில் அளிக்கப்படும் சித்த மருத்துவ சிகிச்சைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதை ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.