திருச்சியில் குப்பை சேகரிக்க 100 வாகனம்:அமைச்சர் கே.என்.நேரு தொடக்கம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் குப்பை சேகரிக்க 100 வாகனங்களை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-10 07:15 GMT
திருச்சி நகரில் குப்பை சேகரிப்பதற்கான நூறு வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு  தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி மூலமாக சாலையை சுத்தம் செய்யும் வாகனங்கள் ரூ.1.73 கோடி மதிப்பிலான 2 வாகனங்கள் மற்றும் வீடுதோறும் குப்பை சேகரிக்க ரூ.2.20 கோடி மதிப்பிலான 100 வாகனங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்காககொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

ஜல் ஜீவன் திட்டத்திற்காக மத்திய அரசு 50 சதவீதம் நிதி உதவி வழங்குகிறது.மாநில அரசு 50 சதவீதம் நிதியை தர வேண்டும்.தற்போது உள்ள சூழலில் எந்த ஒரு மாநிலமும் 50 சதவீத நிதியை வழங்க கூடிய நிலையில் இல்லை.

அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால் மத்திய அரசு 75 சதவீத நிதியை வழங்க வேண்டும். மீதமுள்ள 25 சதவீத நிதியை மாநில அரசு ஏற்கும்.கடந்த 2011- ஆம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் நகர்புற பகுதிகளில் 48.35 சதவீத மக்கள் வசிக்கிறார்கள்.

2021- கணக்கின் படி அது 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையானது 60 சதவீதமாக உயரும் என இது குறித்த ஆய்வு தெரிவிக்கிறது. சுத்தம், சுகாதாரம், எளிதான வேலை வாய்ப்பு போன்ற காரணங்களால் தான் அதிகப்படியான மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு குடியேறுகிறார்கள்.

ஆனாலும் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களுக்கே மத்திய அரசு நிதி வழங்குகிறது.ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்க ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும். தடுப்பணைகள் கட்ட நிதி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம்.

குடிநீர் வடிகால் வாரிய நீரியல் துறை நிபுணர், கம்பரசம்பேட்டை பகுதி காவிரி ஆற்றிலும், நொச்சியம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையுடன் கூடிய பாலத்தை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்தோம். இந்த அணைகள் மூலம் ஏறத்தாழ 8.75 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரைப் அதிகரிக்கவும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும் இயலும். இதுகுறித்து மத்திய அமைச்சரிடம் விவரித்துள்ளோம். திட்ட அறிக்கையினை அவர் கேட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் தான் அதிக நகர்ப்புற பகுதிகளை கொண்டுள்ளது.தற்போது மத்திய அரசு தமிழக அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழங்குகிறது.

கடந்த காலங்களில் ஆட்சி புரிந்த அரசு தமிழக அரசை ரூ.5.6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தள்ளி விட்டு சென்று விட்டது.இந்த கடும் நிதி நெருக்கடியிலும் தமிழக முதல்வர் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4000 கோடி ரூபாயும்,விவசாயக்கடன் தள்ளுபடி அது மட்டுமின்றி நகைக்கடன் தள்ளுபடியும், இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி,  மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News