திருச்சியில் செல்போன் வழிப்பறி செய்த கும்பல் கைது
திருச்சியில் செல்போன் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி நகரில் செல்போன் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து செல்போன் வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்ய கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன் பலனாக திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் செல்போன்கள் வழிப்பறி செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜா மற்றும் அரவிந்த குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது தவிர காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கோவையை சேர்ந்த வெங்கடேசன் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்த பவித்ரன் ஆகிய இருவரையும், மதுரையை சேர்ந்த லதா மற்றும் ராமு ஆகியோரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர் .
மதுரையைச் சேர்ந்த ஜாக்கி, பிரசாந்த் ,திருச்சி பாலக்கரை சேர்ந்த சிவா ஆகியோரை கே.கே. நகரில் செல்போன் வழிப்பறி தொடர்பாக மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டன.
10 பேர் கொண்ட இந்த செல்போன் வழிப்பறி கும்பலை கைது செய்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.