திருச்சி காந்தி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை சரிவு

வரத்து அதிகரிப்பால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறிகள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-03 07:35 GMT

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்தது. ஆனால், தேவை அதிகமாக இருந்ததால், அவற்றின் விலை கிடு, கிடுவென உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தக்காளி, கத்திரிக்காய் போன்றவை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்தனர்.

இந்த நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளது. மார்கழி மாதம் என்பதால் திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெற வில்லை. இதனால் காய் கறிகளின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று காந்தி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை மள, மள வென சரிந்தது.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று நல்ல தரமான மணப்பாறை கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும், வரி கத்தரிக்காய் ரூ.30-க்கும் விற்பனையானது. இந்த கத்திரிக்காய்கள் கடந்த 2 மாதங்களாக ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. அதேபோன்று ஒரு கிலோ ரூ.130-க்கு விற்கப்பட்ட தக்காளி, அவரைக்காய் தற்போது ரூ.30 முதல் ரூ.40 வரையும், ஒரு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.50-க்கும், ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்பட்ட பாகற்காய் ரூ.40-க்கும், ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையான புடலை ரூ.20 முதல் ரூ.30 வரையும் விற்பனையானது. மேலும் ரூ.60-க்கு விற்கப்பட்ட சுரைக்காய், சவ்சவ் ரூ.20-க்கும், பீன்ஸ், இஞ்சி, முள்ளங்கி ஆகியவை ரூ.30-க்கும், கேரட் ரூ.50-க்கும், உருளை ரூ.25-க்கும், பச்சை பட்டாணி, மொச்சை, பெரிய வெங்காயம் ஆகியவை ரூ.40-க்கும், மல்லி,புதினா கட்டு ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

அதே நேரம் முட்டைக்கோஸ், பீட்ரூட், மிளகாய், முருங்கைக்காய், மாங்காய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை குறைய வில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரையும், மாங்காய் ரூ.80 முதல் ரூ.100 வரையும், முருங்கைக்காய் ரூ.150 முதல் ரூ.200 வரையும், மிளகாய் ரூ.70-க்கும்  விற்கப்படுகின்றன.

இதுபற்றி திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலகண்ணனிடம் கேட்ட போது, தற்போது விளைச்சல் அதிகமாகி காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் தேவை குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றார்.

திருச்சி காந்திமார்க்கெட்டில் காய்கறி விலை சரிந்ததால் இல்லத்தரசிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருந்த போதிலும், சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகள் விலை சற்று அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News