ஆன்லைன் பிசினஸ் என்று கூறி பல லட்சம் மோசடி. வாலிபர் கைது.
ஆன்லைன் பிசினஸ் என கூறி, திருச்சியில் பல லட்சம் மோசடி செய்த வாலிபர் உட்பட 4 பேர் கைது.
திருச்சி வயலூர் ரோடு, எஸ்.சி.ராயல் அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் மெர்வின் கிறிஸ்டோபர் (வயது 28). இவர் கிளிக் இன் டிராக் ஆபீஸ் என்ற மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனியை தில்லைநகர் 11-ஆவது கிராஸ் பகுதியில் நடத்தி வருகிறார்.
இதன் வாயிலாக சென்னை பம்மல் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 47) என்பவருக்கு எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் வீட்டில் இருந்தபடிய சுலபமாக வேலை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று அந்த எஸ்எம்எஸ்சில் கூறப்பட்டு இருந்ததாம்.
இதனை தொடர்ந்து மெர்வின் கிறிஸ்டோபரை, சென்னையில் இருந்து அரவிந்தன் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது ரூ.30 ஆயிரம் முன் பணம் செலுத்தி உறுப்பினரானால், மாதா மாதம் ரூ.20 ஆயிரம் பணம் கிடைக்கும். மாதம் ஒன்றுக்கு 60 நோயாளிகளின் பெயர்களை மட்டும் பட்டியல் போல் தயார் செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் மாதம் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும் என்று மெர்வின் கிறிஸ்டோபர் கூறி உள்ளாராம்.
இதனை நம்பிய அரவிந்தன் படிப்படியாக ரூ. 69 லட்சத்து 43 ஆயிரத்து 500/-ஐ வங்கி கணக்கு மூலமாக முதலீடு செய்துள்ளார். ஆனால் அதன் பின்னர் மெர்வின் கிறிஸ்டோபர் தலைமறைவாகி உள்ளார். அவரை பற்றிய விவரங்கள் குறித்து அரவிந்தன் விசாரித்த போது தன்னை போலவே பலரும் ஏமாந்து உள்ளது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து ஏமாந்தவர்கள் ஒன்று சேர்ந்து மெர்வின் கிறிஸ்டோபர் ரகசியமாக வீட்டிற்கு வரும் போது அவரை பூட்டி வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் வந்து அவரை மடக்கி பிடித்தனர்.
தொடர்ந்து தில்லைநகர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி மெர்வின் கிறிஸ்டோபர், அவரின் தந்தை மைக்கேல் சேவியர், தாய் மேரி, சகோதரி மோனிகா ஜெனட், அவரின் உறவினர் தம்பு ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து உள்ளனர்.