திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கர்நாடக மாநிலத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-01-06 11:30 GMT

திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக மேலும் ஒன்பது புகார்கள் அவர் மீது கூறப்பட்டன.

இந்த மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். ஆனால், அவரது முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதன் பின்னர் அவர் தலைமறைவானார். இதற்காக ஐந்து தனிப்படைகளை விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகர் ஏற்படுத்தினார். இதன் பின்னர், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கேரளா, கர்நாடகா பகுதியில் தலைமறைவாக இருக்கிறார் என யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியானது. தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் போலீசார் கண்காணித்து வந்தனர். ஓரிரு நாள்களில் ஜாமீன் கிடைக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற பகுதியில் ராஜேந்திர பாலாஜி நேற்று கைது செய்யப்பட்டார்.

இன்று விருதுநகரில் விசாரணையை முடித்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 2-ல் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கினை விசாரித்த நீதிபதி, ராஜேந்திர பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுரை மத்திய சிறைச்சாலைக்கு ராஜேந்திரபாலாஜியை அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக அவரை மதுரை மத்திய சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு அதிகாரிகள் மாற்றினர். இதனால் ராஜேந்திர பாலாஜியை இன்று மதியம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News