திருச்சி கோரையாற்றில் வெள்ளப்பெருக்கால் வயலூர் சாலை பகுதி பாதிப்பு

திருச்சி கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வயலூர் சாலை பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-29 11:30 GMT

கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்சி வயலூர் சாலையில் தண்ணீர் குளம்போல்  தேங்கி நிற்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியது முதலே கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த பல வருடங்களுக்கு பிறகு இந்த மழை பெய்து வருவதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் திருச்சியில், குழுமணி, செல்வம் நகர், ஆனந்த் அவன்யூ உள்ளிட்ட ஏராளமான பகுதியில் தண்ணீர் நிரம்பி நிற்பதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு வருகின்றனர். மற்ற அமைப்புகள், இளைஞர்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாதவர்களுக்கு உணவு, தண்ணீர், பால் பாக்கெட் போன்றவைகளை வாங்கி சென்று கொடுத்து உதவி வருகின்றனர். 

இதே போல் திருச்சி கருமண்டபம் பகுதியிலும் கோரையாற்று தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். திருச்சி- திண்டுக்கல் சாலையில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

Tags:    

Similar News