திருச்சி ஏர்போர்ட் அருகே குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்: பொதுமக்கள் மறியல்
திருச்சி ஏர்போர்ட் அருகே குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி, ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஜே.கே.நகர் மற்றும் லூர்து நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக, இந்தப் பகுதிகளில் 4 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக பலர் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக தங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மழை நின்ற பிறகும் தண்ணீர் வடியும் அளவு கொஞ்சம் கூட குறையாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திருச்சி– புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஜே.கே.நகர் சாலை இணையும் பகுதியில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தாசில்தார் சேக் மஜித், திருச்சி மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவள்ளி, நிர்வாக பொறியாளர் குமரவேல் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஜே.கே. நகர் மற்றும் லூர்து நகர் பகுதிகளுக்கு வடிகாலாக விளங்கும் கொட்டப்பட்டு குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பி வருவதால் எதிர் திசையில் தண்ணீர் வருகிறது. இதன் காரணமாகவே இப்பகுதியில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்துள்ளது எனக் கூறியவர்கள், வடிகால்கள் ஆய்வு செய்யப்பட்டு 4 நாட்களுக்குள் முழுமையாக தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.