கும்பகோணம் நிதி நிறுவனத்தில் ஏமாந்தவர்கள் புகார் செய்ய போலீசார் அழைப்பு

கும்பகோணம் மோசடி நிதிநிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-11-17 07:39 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் கே.சி.எல். (கிரிஸ் கேபிடல்) மற்றும் விக்டரி என்ற பெயரில் ஆர். கணேசன், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், வெளிநாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகவும், தங்களிடம் செய்யும் முதலீட்டுக்கு கவர்ச்சிகர முதிர்வு தொகை தருவதாகவும், ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் இந்த நிதிநிறுவனத்தினர் கூறியதை நம்பி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்த முகமது யூசுப் சவுகத் அலி ஜபருல்லா ரூ.15 கோடி முதலீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை ரூ.1 கோடியே 79 லட்சத்து 31 ஆயிரத்தை திருப்பி கொடுத்த அவர்கள் மீதம் உள்ள ரூ.13 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் சுமார் 39 பேர் இவர்கள் மீது புகார் செய்துள்ளனர். அதன்பேரில் ஆர்.கணேசன், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை புகார் கொடுக்காதவர்கள் அசல் ஆவணங்களுடன் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் செய்யலாம் என திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News