திருச்சியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு தண்டனை

திருச்சியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.;

Update: 2023-05-24 12:04 GMT

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் (கோப்பு படம்)

திருச்சியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தந்தை, மகனுக்கு தலா 7 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருச்சி காந்திநகர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் உபகாரன் (வயது 59 ).இவரது மகன் பாஸ்கர்( வயது 29 ).காந்திநகர் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மகன் கர்ணன் (வயது 28)

உபகாரன் குடும்பத்திற்கும் சரவணகுமார் குடும்பத்திற்கும் பெண் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 27 -5-2019 அன்று சரவண குமாரும் அவரது மகன் கர்ணனும் வீட்டில் இருந்தனர்.

அப்போது அங்கு வந்த உபகாரன் மற்றும் அவரது மகன் பாஸ்கர் ஆகிய இருவரும் வீடு புகுந்து அரிவாளால் சரவணகுமாரை வெட்டினர். இதனை கர்ணன் தடுத்தார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சரவணகுமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய போலீசார் உபகாரன் மற்றும் அவரது மகன் பாஸ்கர் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் மீது திருச்சி குற்றவியல் தலைமை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் சாட்சிகள் விசாரணை  முடிவு பெற்று இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட உபகாரன் மற்றும் அவரது மகன்  பாஸ்கர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் பாஸ்கருக்கு 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதமும், அவரது தந்தை உபகாரனுக்கு 7வருடம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.7500 அபராதமும்  விதித்து நீதிபதி மீனா சந்திரா தீர்ப்பளித்தார்.

அபராத தொகையை கட்ட தவறினால் இருவரும் மேலும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜரானார்.

Tags:    

Similar News