போலி பாஸ்போர்ட்டுடன் இலங்கை தமிழர் திருச்சி விமான நிலையத்தில் கைது
போலி பாஸ்போர்ட் எடுத்து இலங்கை செல்ல முயன்றவர் திருச்சி ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளிடம் பிடிபட்டு கைதானார்.;
திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று காலை புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வேடசந்தூர் புதிய இ.பி காலனியை சேர்ந்த இலங்கை தமிழர் சிவகுமார் (வயது 52) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர்.
இந்த பாஸ்போர்ட் இந்திய ஆவணங்கள் மூலம் பெறப்பட்டது என தெரியவந்தது. ஆனாலும் அதிகாரிகள் சிவகுமாரிடம் ஆய்வு செய்தபோது, சொந்த ஊர் இலங்கை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றதாக கூறி சிவகுமாரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் இமிகிரேசன் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில், கடந்த 1975-ல் இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கப்பல் மூலம் ராமேஸ்வரம் வந்து, அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் உள்ள தாத்தா கந்தசாமி வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இதற்கிடையில் 2011-ல் இந்திய ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றார். அந்த பாஸ்போர்ட் கடந்த ஆக.17-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மீண்டும் போலி ஆவணங்கள் மூலம் வரும் 2031-ஆக.16-ஆம் தேதி வரை அனுமதியுடன் பாஸ்போர்ட் பெற்று இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து சிவகுமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.