திருச்சி ஆவின் பால் பண்ணை தீ விபத்தில் சிக்கிய ஊழியர் உயிரிழப்பு
திருச்சி ஆவின் பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயம் அடைந்த வாலிபர் உயிரிழந்தார். உறவினர்கள் மறியல் செய்தனர்.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென அங்கிருந்த பாய்லர் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் அதிக வெப்பம் காரணமாக வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தது.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி துறையூரை சேர்ந்த ருத்ரேஸ்வரன் (வயது 24) என்ற ஒப்பந்த ஊழியர் உடல் முழுவதும் தீ பரவி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்க்கப்பட்டார். பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ருத்ரேஸ்வரன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆவின் பாய்லர் ஆலை வெடித்ததற்கு காரணம் ஆவின் நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் தான் என்று கூறி உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி காப்பீடு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பிரேத பரிசோதனை செய்த ருத்ரேஸ்வரனின் உடலை உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.