திருச்சி அருகே வில்லியாரின் புடைப்புச் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு

திருச்சி அருகே 3.5 அடி உயரமும், 2 அடி அகலம் உடைய பலகைக் கல்லில் வில்லியாரின் புடைப்புச் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு

Update: 2021-11-19 02:15 GMT

திருச்சி அருகே கண்டெடுக்கப்பட்ட புடைப்பு சிற்பம் 

திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது இனாம்குளத்தூர். இவ்வூர் முந்தைய காலத்தில் கிருட்டிணசமுத்திரம் என்றும் பின்னர் வெள்ளாங்குளத்தூர் என்றும் அழைக்கப்பட்டதாகவும், பின்னர் இனாம்தாரர்கள் வருகைக்குப் பின்னர், இனாம்குளத்தூர் என்று மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வூர் மாரியம்மன் கோயில் குளக்கரையில் கோயிலுக்கு இடப்புறத்தில் 3.5 அடி உயரமும், 2 அடி அகலம் உடைய பலகைக் கல் ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டது. அதில் வில்லியாரின் புடைப்புச் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளதை திருச்சியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், அறிவியல் பலகை மற்றும் ஆஸ்ட்ரோ கிளப் நிர்வாகியும், பாரதி மெட்ரிக் பள்ளி முதல்வருமான பாலா பாரதி கண்டறிந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, வாரி முடித்த கொண்டையும், காதணியும், கழுத்தணியும், முன் கரங்களில் கடக வளையும், பின் கரங்கள், கால்களில் காப்பும், இடுப்பில் அரைப்பட்டிகையும், குறுவாளும் அணிந்து இடக்கரத்தில் வில்லையும், வலக்கரத்தில் அம்பையும், நாணையும் இணைத்துப் பிடித்து இழுத்து எதிரியை அம்பு எய்தித் தாக்கும்படியாக இடக்காலை முன்பக்கமாக நீட்டியும் வலக்காலை பின்பக்கமாக நீட்டியவாறும் வில்லியாரின் வீரக் கோலத்தை இந்தப் புடைப்புச் சிற்பம் சுட்டிக் காட்டுகிறது.

இந்த வில்லியாரின் உருவத்தை வில்லுக்காரன் என உள்ளூர் மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவ்வூரில் வாழ்ந்த ஒரு பிரிவினர் தற்போது தோகைமலை வாழை ஆராய்ச்சி மையம் அருகிலுள்ள இனாம்புலியூருக்கு புலம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று இக்கல்லை வழிபடும் செய்தி ஊர் மக்கள் வாயிலாக அறிய முடிகிறது.

தமிழ் மொழியின் இலக்கண நூலான தொல்காப்பியம் பொருளதிகாரம் வெட்சித்திணை 1.5 பகுதியில் வீரக்கல் என்னும் நடுகல் நடுவது குறித்த செய்திகள் சங்க இலக்கிய கால நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் வீரக்கல் என்னும் நடுகல் பற்றி குறிப்பிடப்படுகிறது. கல்வெட்டுப் பொறிப்புகள் ஏதும் இல்லாத இந்த வீரக்கல் என்னும் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள வில்லியாரின் உருவ அமைப்பின் அடிப்படையில் இக்கல் நிறுவப்பட்ட காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம் என்றார் அவர்.

Tags:    

Similar News