திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது

திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-04-20 12:36 GMT

கைது செய்யப்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ்.

திருச்சியில் இன்று ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கட்டிட காண்ட்ராக்டர். இவர் தனது நண்பர் பாலு என்பவருக்கு திருச்சி கம்பரசன் பேட்டை ஜெயராம் நகரில் ஒரு வீடு கட்டி கொடுத்துள்ளார். பின்னர் அந்த வீட்டுக்கான மின் இணைப்பு பெற்றுக் கொடுத்துள்ளார். பிறகு பாலு அந்த குடியிருப்பினை வணிக கட்டிடமாக  மாற்ற முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து குடியிருப்புக்கான மின் இணைப்பினை வணிக பயன்பாட்டுக்கு மாற்றி தரும்படி பாலு வெங்கடேசனிடம் கேட்டு கொண்டுள்ளார். உடனே அவரும் கடந்த ஜனவரி மாதத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தினை திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் உள்ள சிந்தாமணி பிரிவில் கொடுத்தார். விண்ணப்பம் அளித்து மூன்று மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் காண்ட்ராக்டர் வெங்கடேசன் சம்பந்தப்பட்ட சிந்தாமணி பிரிவுக்கான உதவி பொறியாளர் ராஜேஷ் என்பவரை கடந்த 17 -4- 2023 அன்று காலை சந்தித்து விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு உதவி பொறியாளர் ராஜேஷ் தனக்கு ரூ. 20000 லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பிற்கான  டேரிப் மாற்றம் செய்து தர முடியும் என கூறியுள்ளார். பின்னர் வெங்கடேசன் அவ்வளவு தொகை தர முடியாது கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ரூ.15ஆயிரம் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. மணிகண்டனிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் இதனை தொடர்ந்து மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர் ‘

பின்னர் அவர்கள் செய்து கொண்ட ஏற்பாட்டின் படி இன்று காலை உதவி பொறியாளர் ராஜேஷுக்கு வெங்கடேசன் ரூ. 15,000 லஞ்சம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர். லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News