திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து மின் மோட்டார்கள் திருட்டு
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இருந்து மின் மோட்டார்கள் திருடப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் மின் மோட்டார்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிமனை உள்ளது. இந்த பணி மனையில் சுமார் 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள ரயில் என்ஜின்களை பழுது பார்த்து பராமரிப்பது, ரயில் பட்டியலை புனரமைப்பது போன்ற பணிகள் இங்கு நடைபெற்று வருகிறது. இது தவிர ஊட்டி மலை ரயில் என்ஜினும் இங்கிருந்து தயாரித்து அனுப்பப்பட்டது தான். மேலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிருந்து மீட்டர்கேஜ் பாதை ரயில் என்ஜின்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த பணிமனை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமையான வரலாற்றுக்கு சொந்தமானதாகும். இந்த பணிமனையின் பாதுகாப்பு பணிகள் முழுவதும் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஊழியர்கள் பணி நேரத்தின் போது தங்களது அடையாள அட்டையை காட்டினால் தான் உள்ளே செல்ல முடியும். அதே போல் தான் உள்ளே இருந்தும் வெளியே வர முடியும். அந்த அளவுக்கு இங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மிக அதிகமாக எப்போதும் உண்டு. வெளி ஆட்கள் யாரும் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முடியாது.
இந்நிலையில் நேற்று இந்த பணிமனையின் அருகில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த லாரியை சோதனை போட்ட போது அதில் மூன்று மின்சார மோட்டார்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மேல் மணல் போட்டு அதனை மூடி மறைத்து வைத்திருந்தனர். இந்த மின்சார மோட்டார்கள் ரயில்வே பணிமனையில் இருந்து திருடி வெளியே கொண்டு செல்வதற்காக லாரியில் ஏற்றப்பட்டு இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த மின்சார மோட்டார்களை திருடி கொண்டு வந்ததாக கோபால் ,மணிகண்டன் என்ற இரண்டு பேரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். இந்த மின்சார மோட்டார்களின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு படையினரின் கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இவை திருடப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பொன்மலை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் கிரண் உள்பட மூன்று அதிகாரிகளை ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு மிகுந்த ரயில்வே பணிமனையில் 3 மின்சார மோட்டார்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.